திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (வயது 26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.