கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹாசன் தொகுதி ம.ஜ.த., – எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா( 33) முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். சில பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், கடந்த 23ம் தேதி சமூக வலைதளங்களில் பரவின. இதுகுறித்து விசாரிக்க மாநில காங்., அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்று விட்டார். பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா நேற்று அளித்த பேட்டியில், நாங்கள் எங்கும் ஓடிப்போகவில்லை. இங்கு தான் இருக்கிறோம். தேவகவுடா குடும்பத்தின் மீது, தேவையில்லாத குற்றச்சாட்டு வருவது புதிது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலே, எங்கள் குடும்பத்திற்கு தொல்லை கொடுக்கின்றனர். ஜெர்மனி செல்ல வேண்டும் என்று, பிரஜ்வல் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவரை விசாரணைக்கு அழைத்தால் கண்டிப்பாக ஆஜர் ஆவார் என்றார். இதற்கிடையில், ‘வீடியோவில் இருப்பது பிரஜ்வலின் முகம் இல்லை. ‘டீப் பேக்’ தொழில்நுட்பம் வாயிலாக போலி வீடியோ உருவாக்கி உள்ளனர்’ என்று, ம.ஜ.த.,வினர் கூறியுள்ளனர். சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவின் அடிப்படையில், சிறப்பு விசாரணை குழு அதிகாரி சீமா லட்கர், ஐந்து பெண்களை நேற்று விசாரணைக்கு அழைத்தார். அவர்களும் விசாரணைக்கு ஆஜராகினர். ரகசிய இடத்தில் வைத்து, விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. ஆபாச வீடியோ பிரச்னையில் சிக்கியுள்ள பிரஜ்வலுக்கு, கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.யாத்கிர், குருமிட்கல் தொகுதி ம.ஜ.த., – எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர், தேவகவுடாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘சில நாட்களாக மாநிலம் முழுதும் பிரஜ்வல் ரேவண்ணா பெயரில் பரவி வரும் ஆபாச வீடியோவால் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டு உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் பிரஜ்வல் தவறு செய்து இருப்பார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது. கோலார், முல்பாகல் ம.ஜ.த., – எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில், ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,க்கள் 19 பேரையும் விமர்சித்து சிலர் பேசுகின்றனர். இதனால் 19 எம்.எல்.ஏ.,க்களா அல்லது பிரஜ்வலா என்பதை, கட்சி தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை. ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி, கட்சியின் கொள்கையை காப்பாற்றுவதன் மூலம், எங்களை தர்மசங்கடத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என பதிவிட்டு உள்ளார். இது குறித்து, கட்சியின் மாநில தலைவரான குமாரசாமி அளித்த பேட்டியில், ”தவறு செய்தது யாராக இருந்தாலும், தண்டனை அனுபவிக்க வேண்டும். பிரஜ்வலை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று, சில தலைவர்கள் கூறுகின்றனர். ஹூப்பள்ளியில் இன்று எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கிறது. பிரஜ்வலை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவு எடுப்போம். ஒருவர் செய்த தவறுக்காக, கட்சியை குறை சொல்வது சரி இல்லை. இந்த விஷயத்தை காங்கிரசார் பெரிதுபடுத்த பார்க்கின்றனர்,” என்றார்.