காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார குழுவில் பொறுப்பில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் முகமது ஆரிப் (நசீம்) கான் விலகினார். மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடிகூட்டணி ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தாததால் அதிருப்தி அடைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாகக் அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார். இது குறித்து முகமது ஆரிப் கான் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: சாதி, மதஅடையாளங்களைக் கடந்து அனைவரையும் தன்னுடன் இணைந்துக் கொண்டுஅழைத்து செல்வதே காங்கிரஸ் கட்சியில் கொள்கையாக ஆரம்பம் முதல் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தற்போது நடந்துவரும் தேர்தலில் மகாராஷ்டிராவின் 48 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் சிறுபான்மை சமூகத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மராத்தியர்கள், பட்டியலின-பழங்குடியினர் என எந்த வித்தியாசமும் பாராமல் அனைவருக்கும் இடமளித்து வந்த காங்கிரஸ் கட்சி தற்போது அதன் அடிப்படை கொள்கையிலிருந்து இடறியிருப்பது என்னையும் மிகுந்த வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது. ஏன் இந்த மக்களவை தேர்தலில் ஒரு சிறுபான்மை வேட்பாளர்கூட இடம்பெறவில்லை? மக்களிடம் வாக்கு சேகரிப்புக்காக நான் பிரச்சாரம் செய்ய சென்றால் அவர்கள்கேட்கக்கூடிய கேள்விகளுக்கு என்னிடம் பதில்இல்லை. ஆகவே மகாராஷ்டிராவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலின் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டம் வாக்குப்பதிவுகளுக்காக நான் பிரச்சாரம் செய்யப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.