ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்க வேட்டை நிகழ்த்தும் போட்டிகளில் ஒன்று மல்யுத்தம். இந்த நிலையில், ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தந்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லியில் திடீரென இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி பூனியா கூறும்போது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை, மல்யுத்த வீரர்கள் சகித்து கொள்ள விரும்பவில்லை. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதுபற்றி விளக்குவோம் என கூறினார். இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்திய மல்யுத்த கூட்டமைப்பினரால் வீரர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறோம். மல்யுத்த விளையாட்டு என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், வினேஷ் போகத் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்தபோது, மனதளவில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் என்னை கொடுமைப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் எனது வாழ்வை முடித்து கொள்ளலாம் என நான் நினைத்தேன். எந்தவொரு வீரர், வீராங்கனைக்கும் ஏதேனும் நடந்து விட்டால், அதற்கு தலைவரே பொறுப்பாவார். பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர். கூட்டமைப்புக்கு சாதகமுடன் நடந்து கொள்ளும் சில ஆண் பயிற்சியாளர்கள், பெண் பயிற்சியாளர்களிடம் தவறாக அணுகுகிறார்கள். அவர்கள் வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அமைப்பின் தலைவர் பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அவர்கள் (கூட்டமைப்பு) எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகின்றனர். எங்களை சுரண்டுகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாங்கள் போகும்போது, ஒரு பயிற்சியாளரோ, மருத்துவரோ உடன் வருவதில்லை. நாங்கள் இதுபற்றி கேட்டால் பதிலுக்கு மிரட்டப்படுகிறோம் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.