அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட், ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த மனு 43 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.
ஜாமீன் மனு இன்று காலை 11 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில், மனுதாரார் 320 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். எனவேஅவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் . செந்தில் பாலாஜியின் ஜாமீனை தாமதப்படுத்துவதற்காகவே அமலாக்கத்துறை தாமதமாக மனு தாக்கல் செய்கிறது என செந்தில்பாலாஜி தரப்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது.
இதைக்கேட்ட அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி , ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.