விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018-ம் ஆண்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள், விசாரணை நிறைவுபெற்ற நிலையில், ஏப்ரல் 26ல் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜராகவில்லை. தனக்கு உடல்நலமில்லை என்று தெரிவித்து கடிதம் கொடுத்தார்.
எனவே தீர்ப்பை ஏப்ரல் .29-ம் தேதிக்கு(இன்று) ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார். அதன்படி இன்று நிர்மலாதேவி , முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2 வது மற்றும் 3வது குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்படுகிறார்கள் என நீதிபதி கூறினார். விடுதலையான இருவரும் நீதி வென்றது என கூறினர்.
பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது பேராசிரியை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைக்கும்படி கோரினார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் கடும் எதிர்ப்பு தெரி்வித்த நிலையில் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைதண்டனை வழங்கவேண்டும் , இன்றே தண்டனையை அறிவிக்க என்றார்.
குற்றவாளி என கூறிய உடனேயே தண்டனை வழங்க வேண்டும் என்பது இல்லை எனவே தண்டனையை நாளை வழங்கலாம். குற்றம் சாட்டப்பட்டவருக்கு தனது தரப்பு வாதத்தை சொல்ல அவகாசம் வழங்கவேண்டும் என நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டனை விவரத்தை பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிப்பதாக கூறினார். எனவே 2.30 மணிக்கு நிா்மலாதேவிக்கான தண்டனை விவரத்தை நீதிபதி அறிவிப்பார்.