ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா நடைபெற வழக்கம் அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்காக அதிகாலை 3.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார் பின்னர் தங்க கொடி மரத்தில் உள்ள கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்யப்பட்டு சரியாக 6.15 மணிக்கு மேஷ லக்னத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் செய்யப்பட்டது..
சித்திரை தேர் திருவிழா உற்சவம் 11 நாட்கள் நடைபெற உள்ளது அதில் முக்கிய நிகழ்வுகளாக மே-01- ஆம் தேதி அன்று கருடசேவை வைபவமும், மே – 04- ம் தேதி நம்பெருமாள் நெல் அளவை கண்டருளும் வைபவமும் , மே – 05-ம் தேதி நம் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் வைபவமும் நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே – 06ஆம் தேதி அன்று காலை 6 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் இந்நிலையில் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொடியேற்ற நிகழ்வில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.