பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. டில்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே புகாரின் அடிப்படையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு ஊழல் சிக்கி உள்ள ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு டில்லி காங்., தலைவர் அரவிந்தர் சிங் லவ்வி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக காங்., கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சி மீது பொய் குற்றச்சாட்டுகளை ஆம்ஆத்மி சுமத்தியது. தற்போது டில்லியில் ஆம்ஆத்மி உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளுடன் ஒப்பிடுகையில், ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ், டில்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. டில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை. இதனால் இனிமேலும் கட்சியின் தலைவராக தொடர்வது எந்த நியாயமான காரணமும் இல்லை. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அரவிந்தரின் இந்த திடீர் முடிவு காங் முக்கிய தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.