காரைக்காலை அடுத்த, மேல வாஞ்சூர் பகுதியில், அதானிக்கு சொந்தமான தனியார் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து, நிலக்கரிகள் அளவுக்கு அதிகமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை புறக்கணித்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளை, பெருமளவு ரயில் மூலமாகவும் சாலை மார்க்கமாகவும் கொண்டு செல்லப்படுகின்றன. சாலை மார்க்கமாக கனரக வாகனங்களில், மேல்முடி எதுவும் இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் எடுத்து செல்வதால் நிலக்கரிகள் சாலைகளில் சிதறி கிடக்கின்றன. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில், காரைக்காலை அடுத்த அம்மாள் சத்திரம் பகுதியில் உள்ள சாலை வளைவில், அதிக அளவு நிலக்கரிகள் சாலையில் சிதறி இருந்ததால், இருசக்கர வாகனத்தில் சென்ற 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்
அடுத்தடுத்து சறுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்களை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து நிலக்கரியில் சறுக்கி விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. எனவே காரைக்கால் மாவட்ட நிர்வாகம், தனியார் துறைமுகத்தின், பாதுகாப்பற்ற மற்றும் அளவுக்கு அதிகமான நிலக்கரி ஏற்றுமதியை, சாலை மார்க்கமாக கொண்டு செல்லும் நிலையில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்துகளை பார்த்த அச்சாலையை ஒட்டி உள்ள வணிகர்கள் பொதுமக்கள் தாமாக முன்வந்து சாலையில் சிதறி கிடந்த நிலக்கரிகளை கூட்டி பெருக்கி அள்ளி சுத்தம் செய்தனர்.