இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. கடந்த 19ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஒட்டுமொத்தமாக 64 சதவீதம் வாக்குப்பதிவானது. இந்நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
கேரளா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் மொத்த மக்களவைத் தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள் நேற்று தேர்தலை எதிர்கொண்டன. கர்நாடகாவில் 14 இடங்களுக்கும், ராஜஸ்தானில் 13 இடங்களுக்கும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 8 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றன.
உத்தரபிரதேசத்தில் (54.85) மிகக் குறைந்த வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மணிப்பூரில் 77.32 சதவீதமும், சத்தீஸ்கரில் 73.05 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வரிசையில் மேற்கு வங்கம் (71.84), ஜம்மு – காஷ்மீர் (71.21), அசாம் (71.11), கேரளா (70.35), கர்நாடகா (69.23), ராஜஸ்தான் (62.46), மகாராஷ்டிரா (58.57), மத்திய பிரதேசம் (55.77), பீகார் (55.08) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.