தஞ்சாவூர் அருகே 18 கிராமங்களைக் கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோவிலூர். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா 18 கிராம மக்கள் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். பழமையான இக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மார்ச் 7-ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து 48 நாட்களுக்கு காசவளநாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு கிராமம் சார்பில் சிறப்பு வழிபாடுகள்
நடத்தப்பட்டது. இதையடுத்து மண்டலாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி புனித நீர் அடங்கிய கடங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு, மூலவர் ஜெம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி, விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் காசவளநாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.