மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ணக்கோரும் அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை நூறு சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் அகர்வால் என்பவர் உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப நிபுணர்கள் நீதிபதிகளின் சந்தேகத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். குறிப்பாக வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது என்று தெரிவித்து இருந்தனர். ஆனால் இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் ஆகியவை குறித்த எங்களது சந்தேகங்களுக்கு போதிய விளக்கம் கிடைத்து விட்டதாக தெரிவித்த நீதிபதிகள் தீர்ப்பை நேற்று முன்தினம் ஒத்திவைத்தனர். இதையடுத்து இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள். தீர்ப்பில் கூறி இருப்பதாவது:
நடைமுறைகள், தொழில்நுட்பம் அடிப்படையில் விரிவாக விவாதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா தகவல் தெரிவித்துள்ளார். மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒப்புகைச்சீட்டுகளை வாக்காளர்கள் கையில் எடுத்து பெட்டியில் போட அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. சின்னங்கள் பதிவேற்றும் எந்திரங்களுக்கு சீல் வைக்க வேண்டும், அதனை 45 நாட்கள் பாதுகாக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் ஈவிஎம்-ல் உள்ள மைக்ரோ கன்ட்ரோலை சோதிக்க அனுமதி கோரலாம் என்றும் உரிய அனுமதியுடன் பொறியாளர்கள் பரிசோதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பரிசோதனைக்கான செலவுகளை கோரிக்கை வைக்கும் வேட்பாளர்களே ஏற்க வேண்டும். மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் செலவுத்தொகை திருப்பி அளிக்கப்படும்.
ஒவ்வொரு கட்சிக்கான சின்னங்களுக்கும் தனி பார்கோடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். ஒப்புகைச் சீட்டுகளை எந்திரம் மூலம் எண்ணுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு அளித்துள்ளார். கண்மூடித்தனமாக ஒரு நடைமுறை மீது நம்பிக்கையில்லை என்று கூறுவது தேவையற்ற சந்தேகங்களையே உருவாக்கும் என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தீர்ப்பு அளித்துள்ளது.