அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன்.
இவர் பொட்டக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரிடம், தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி உள்ளார். வட்டி தொகையுடன் அசலையும் சேர்த்து ரூ.5லட்சத்து 40ஆயிரம் தொகையினை கட்டிய பிறகும், பாரி விவசாயி ரங்கநாதனுக்கு அவரது நிலத்தை தர மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையிடம் ரங்கநாதன், பலமுறை புகார் அளித்தும் எந்த விதை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனால் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயி ரங்கநாதன், தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் வந்துள்ளார். இன்று கல்லங்குறிச்சி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அலுவலர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்
மூவருரிடமும் எதற்காக வந்து உள்ளீர் என்று விசாரணை செய்து உள்ளனர். அப்போது விவசாயி ரங்கநாதன், காவலர்கள் முன்னிலையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தங்களது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரது மகன் மற்றும் மனைவி ஆகியோரும் இதுபோன்று பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். அங்கிருந்து காவலர்கள் விவசாயி குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு, அரியலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.