அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில்,… தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார தளம் (IHIP), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் இணையதளத்தை (IDSP) மறுசீரமைப்பு செய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்ததளத்தில் S.P மற்றும் L ஆகிய மூன்று படிவங்கள் உள்ளன. சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் பெறப்பட்ட தொற்றுநோய் குறித்த தகவல்கள் இந்த படிவங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு தொற்றுநோய் பரவல் தடுப்பு மாவட்ட மற்றும் வட்டார அளவிலான விரைவு நடவடிக்கை குழுக்கள் மூலம் (Rapid Response Team) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல் / சளி, வயிற்றுப்போக்கு / வாந்தி பேதி, தோலில் ஏற்படும் கொப்பளங்கள் / அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை, வெறிநாய் கடி, அசாதாரண உயிரிழப்புகள் மனிதர்கள் / பறவைகள் போன்ற தகவல்களை தாங்களாகவே முன்வந்து கீழ் காணும்,
https://ihip.mohfw.gov.in/cbs/-!. இணையதளத்தில் பெயர், தொலைபேசி எண், வயது, வேலை, கிராமம், மாவட்டம், மாநிலம், நிகழ்வு நடந்த நாள், இடம் மற்றும் தொற்றுநோய் குறித்த விவரம் போன்றவற்றை பதிவு செய்து அரசுக்கு தாங்களாகவே முன் வந்து தெரிவிப்பதின் மூலம் பொது சுகாதாரத்துறை விரைந்து கள நடவடிக்கை எடுத்து கொள்ளைநோய் பரவலைத் தடுக்க இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தகவல் அளிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கொள்ளை நோய் பரவலை தடுத்திட இந்த இணையதள வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.