இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
2ம் கட்டத் தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. அத்துடன் ராஜஸ்தானில் உள்ள 13 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.( ஏற்கனவே ராஜஸ்தானில் முதல்கட்டமாக 12 தொகுதிகளில் தேர்தல் முடிந்து விட்டது. அத்துடன் 2 கட்டத்தில் ராஜஸ்தானில் தேர்தல் முடிவடைகிறது)
கர்நாடகா(14), உத்தர பிரதேசம்(8), மகாராஷ்ட்ரா(8), மத்திய பிரதேசம்(7), அசாம்(5), பீகார்(5), சட்டீஸ்கர்(3), மேற்கு வங்கம்(3) ஆகிய 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது.மேற்கண்ட தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து கடந்த 6-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது. இதன் காரணமாக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அமராவதி, சோலாபூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பரப்புரை மேற்கொள்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து அமராவதியில் பேரணி நடத்துகிறார்.
2ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முக்கியமானது ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதி முக்கியமானது. 26ம் தேதி காலை 7 மணிக்கு 89 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்குகிறது.