அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இந்நிலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, மாமன்னன் ராஜேந்திர சோழன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற, பௌர்ணமி கிரிவல நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ லஹஸ்ரீ மாசிலாமணி தேசிக
ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பிரகதீஸ்வரர் மற்றும் பிரகன்நாயகி அம்பாளை தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பௌர்ணமி கிரிவலத்தை விளக்கேற்றி அவர் தொடங்கி வைத்தார். கோவிலில் தொடங்கிய கிரிவலமானது பிரகார வீதி உலா வந்து, கணக்க விநாயகர் கோவில் வழியாக வலம் வந்து இறுதியாக கோவிலில் கிரிவலத்தை முடித்தனர். இதில் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கரகோஷங்கள் எழுப்பி, தேவார திருமுறைகள் ஓதியபடி வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.