ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அறிவிப்பு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை நான் சொல்ல முடியாது. கட்சி மேலிடம் கூடி அதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்கும். நல்லதையே நினைப்போம். பாசிட்டிவாக நினைப்போம் என்றார்.
இதுபற்றி ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி கூறுகையில், அண்ணன் ஓபிஎஸ் உத்தரவிட்டால் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார். இதில் முடிவு எடுக்க வேண்டியவர் அண்ணன் ஓபிஎஸ்.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறியதாவது: ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி பேசி முடிவு எடுப்பார்கள். எங்கள் கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குவித்தியாசத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம்.
எதிர் கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்பதில் குழப்பம் உள்ளது. எங்கள் கூட்டணியின் வெற்றி உறுதி. மக்கள் எந்த மன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய இது ஒரு வாய்ப்பு இதில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.