கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென் திருகைலாயம் என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, 5.5 கி.மீ., மலைப்பாதையில் செல்ல வேண்டும். கடந்த 18ம் தேதியன்று, காலை திருப்பூர் எஸ்.வி., காலனியைச் சேர்ந்த வீரக்குமார்( 31) தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி ஏறினார். சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு திரும்பி வரும் போது ஏழாவது மலையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் வீரக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பர்கள் கோவில் நிர்வாகத்துக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். வீரக்குமாரை, சுமை தூக்கும் பணியாளர்கள் மலையில் இருந்து கீழே துாக்கி வந்தனர். உடனடியாக வீரக்குமார் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்குப் பின், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில், வெள்ளியங்கிரி மலை ஏறிய 8 பேர் பல்வேறு காரணங்களில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.