மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவைக் காண வந்த இளைஞர்கள், பக்தர்கள் வைகை ஆற்றுக்குள் திரண்டிருந்தனர். ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடுவதால் வைகை ஆறு முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தனர். அப்போது ஆற்றுக்குள் இரண்டு கோஷ்டிகள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். கத்தி, பட்டாக்கத்தி, அதிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தாக்கியது. இதில் மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சோனை ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோனை சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் குடும்ப முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.