இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யின் 80 தொகுதிகளில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடைசி கட்டமாக நடைபெறும் தேர்தலில் பிரதமர் மோடியின் வாராணசி தொகுதி இடம்பெற்றுள்ளது.
இங்கு 2014 முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இந்து மகா சபை சார்பில் திருநங்கையான ஹிமாங்கி சகி மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது இவர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
தற்போது மனம் மாறிய இந்துமகா சபை அமைப்பினர், எந்த நிபந்தனையும் இன்றி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். பிரதமர் மோடியை போட்டியின்றி தேர்ந்தெடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்து மகா சபை தலைவர் சுவாமி சக்ரபாணி மஹராஜ் கூறும்போது, “அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததுடன் ராமர் கோயிலையும் பிரதமர் மோடி கட்டியுள்ளார். எனவே, மாறுபட்ட கொள்கை கொண்டிருந்தாலும் அவரை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டும்.
கடந்த 1991-ல் பிரதமராக நரசிம்ம ராவ் பதவியேற்றபோது, அவர் எம்.பி.யாக இல்லை. இதனால் ஆந்திராவின் நந்தியால் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு எதிரான வேட்பாளரை என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம் வாபஸ் பெற்றது. மேலும் 5 சுயேச்சைகளும் வாபஸ் பெற்றனர். இதனால் 5.80 லட்சம் வாக்குபெற்று நரசிம்ம ராவ் வெற்றி பெற்றார். அப்போது இது, கின்னஸ் சாதனையாகவும் பதிவாகியது.
ஏற்கனவே குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.