இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அத்துடன் யூனியன் பிரதேசங்கள், உள்பட மொதம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் அன்று ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது. 20 தொகுதிகளிலும் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 150 பேர் வாக்களிக்க உள்ளனர். கேரளாவிலும் பெண் வாக்காளர்களே அதிகம். அத்துடன் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் 194 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள். வடகரா தொகுதியில் 4 பெண் வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். கோட்டயம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர், பத்தினம்திட்டா,மாவேலிக்கரை ஆகிய 6 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடவில்லை.
கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ், பாஜக ஆகிய 3 கட்சிகள் சார்பில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் மீண்டும் போட்டியிடுகிறார். அதுபோல திருவனந்தபுரம் தொகுதியில் காங். எம்.பி. சசிதரூர் மீண்டும் போட்டியிடுகிறார். திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ்கோபி போட்டியிடுகிறார்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது பிரசாரம் செய்து வந்தனர். நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. எனவே இன்று காலையிலேயே இறுதிக்கட்ட பிரசாரத்தில் அனைத்துக்கட்சியினரும் ஈடுபட்டனர். 26ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.