ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுவார். இதுதான் மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கியமான நாளாகும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மதுரையில் திருவிழாவைக் காண குவிவார்கள். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது. மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19-ந்தேதி பட்டாபிஷேகமும், 20-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன. சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு
வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார். அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர்.
இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார். இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருபாலித்தார்..