மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். நேற்று முன்தினம் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து இன்று திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, பவளக்கனிவாய் பெருமாள் காலை 6:00 மணிக்கு மீனாட்சி கோயிலில் எழுந்தருளினார். முன்னதாக அதிகாலை 4:00 மணிக்கு கோயிலின் மண்டகப்படிகளாகி, சித்திரை வீதிகளில் அம்மனும், சுவாமியும் வலம் வந்தனர். கோயிலின் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8:00 மணிக்கு எழுந்தருளினர். காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக ரூ.30 லட்சம் செலவில் மலர்களால் மணப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் பேர் இந்த பந்தலில் அமர்ந்து திருக்கல்யாண வைபவத்தை பார்த்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஏப்.,22ல் தேரோட்டம் நடக்கிறது. அன்று மூன்று மாவடியில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. ஏப்.,23 அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் அழகர் இறங்குகிறார்.