சென்னை மாவட்டத்தில் பதிவான முழுமையான ஓட்டுப்பதிவு சதவீதத்தை, மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். இதன்படி வடசென்னையில் 60.13 சதவீதம், தென்சென்னையில் 54.27 சதவீதம், மத்திய சென்னையில் 53.91 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இந்த தேர்தலில் 56.10 சதவீத ஓட்டுகளே பதிவாகியுள்ளன. சென்னையில் கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட 4 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக பார்த்தால் முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரில் 56.46 சதவீதம், அமைச்சர் உதயநிதி தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் 54.03 சதவீதம், அமைச்சர் சேகர்பாபு தொகுதியான துறைமுகத்தில் 53.18 சதவீதம், அமைச்சர் சுப்பிரமணியன் தொகுதியான சைதாப்பேட்டையில் 53.25 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் 66.75 சதவீத ஓட்டுப்பதிவும், குறைந்தபட்சமாக ஆயிரம்விளக்கு சட்டசபை தொகுதியில் 52.04 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.