இங்கிலாந்து நாட்டில் லண்டன் பெருநகர காவல் துறையில் உயரதிகாரியாக பதவி வகித்தவர் டேவிட் கேர்ரிக். இவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. எனினும் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற நீண்டகால குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு என்ற இங்கிலாந்து மகளிர் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
கேர்ரிக், தனது 18 ஆண்டு கால காவல் பணி சேவையில், 24 பாலியல் பலாத்காரம் உள்பட 49 பாலியல் குற்றங்களில் தொடர்புடையவராக உள்ளார். அவர் இதனை விசாரணையில் ஒப்பு கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. எனினும், நேற்று காலை நடந்த விசாரணையின் முடிவில் அவரை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இதுபற்றி நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரிஷி சுனக்கும் வருத்தம் வெளியிட்டார்.
கேர்ரிக் போன்றவர்கள் ஒரு காவல் அதிகாரியாக ஒருபோதும் நீடிக்க கூடாது என கடுமையாக கூறினார். இந்த வழக்குகளால், காவல் துறை மீதுள்ள மக்களின் நம்பிக்கை புதைந்து போய் விட்டது. உண்மையான மாற்றம் விரைவில் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூட்டத்தில் வலியுறுத்தினார். இந்த சூழலில், இங்கிலாந்து நாட்டின் மிக பெரிய காவல் அமைப்பு என்ற பெயர் பெற்ற லண்டன் பெருநகர காவல் துறையில் இருந்து அதிகாரி டேவிட் கேர்ரிக் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், காவல் துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கேள்விக்குள்ளாகி இருப்பதுடன், துறை ரீதியிலான விசாரணை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோஷங்களும் எழுந்துள்ளன.