இந்தியாவில் 18வது மக்களவைக்கான முதல்கட்டத் தேர்தல் இன்று தொடங்கியது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் சராசரியாக காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தர்மபுரி தொகுதியில் அதி்க வாக்குகள் பதிவானது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
சென்னையில் இன்ற காலையில் முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் வந்து வாக்களித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத்குமார், விஜய், சரத்குமார், ராதிகா, தனுஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும் காலையில் வாக்களித்தனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார்.
தேனி பெரியகுளம் பகுதியில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாக்களித்தார். வாக்களித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்து இருப்பது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு எடுத்த முடிவு. அதிமுக எங்கள் பக்கம்தான் வந்து சேரும். அதிமுக வேட்பாளர்கள் பற்றி அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும். தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும்” என்றார்.