அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்பியும் மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் வழக்குத் தொடர்ந்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என எடப்பாடி பேசியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், “என் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என்று ஒரு அவதூறை பொய் என்று தெரிந்தே எடப்பாடி பேசியுள்ளார். எனக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்றே பேசியுள்ளார்.
கரோனா சமயத்தில் நிதி தடுத்து வைக்கப்பட்டது. எனினும், ரூ.17 கோடியில் மீதமிருப்பது ரூ.17 லட்சம் தான். இபிஎஸ் தோல்வி விரக்தியில் பேசியுள்ளார். சுய நினைவுடன் தான் அவர் பேசுகிறாரா என்று தெரியவில்லை. திமுகவை தாக்கி பேச வேண்டும் என்பதற்காகவே பேசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியவேண்டும்.
என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளேன். எனது பணியை கொச்சைப்படுத்தி, எனக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற வகையிலேயே எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.