தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. சிதம்பரம்(தனி) தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
செந்துறை வட்டம், சிறுகளத்தூர் முதல் பொன்பரப்பி வரையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது. ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றி பாதுகாப்பாகவும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் வந்த காவல்துறையினர் மக்களிடத்தில் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த கொடி அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயராகவன், அந்தோணி ஆரி, அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.