சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் களம் காணுகின்றனர். தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இறுதி கட்டப் பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் நகரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஆதரவு கேட்டு அரியலூர் நகரில் இன்று மாலை 4 மணிக்கு வாகன பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், இன்று காலையில் தனது பிரசாரத்தை வாலாஜா நகரத்தில் தொடங்கினார். மாலை 4 மணிக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கு அருகே வாகன பேரணியுடன் தொடங்கி, அதிமுக
பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன், முக்கிய வீதிகளின் வழியே சென்று பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை முன்பு தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
பாஜக வேட்பாளர் கார்த்திகாயினி பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி பேருந்து நிலையம் வரை இருசக்கர வாகன ஊர்வலமாக வந்து தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையில் ஜெயங்கொண்டம் நகரில் இன்று மாலை நான்கு ரோடு வழியாக இருசக்கர வாகன ஊர்வலம் ஆரம்பித்து அண்ணா சிலையை தொல் திருமாவளவனை ஆதரித்து பிரசாரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நிறைவு செய்கின்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உட்கோட்டை மற்றும் இடங்கணி கிராமத்தில் இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் இறுதி கட்ட பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் பயணித்து தீயாய் வலம் வந்து தங்களது வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.