ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியைச் சேர்ந்தவர் ஹலிமா சிஸ்ஸே(26) இவரது கணவர் அப்துல்காதர் ஆர்பி. இவர் மாலி ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஹலிமா சிஸ்ஸே கடந்த ஆண்டு மீண்டும் கர்ப்பம் ஆனார். அவரது வயிறு அளவுக்கு அதிகமாக பெரிதாக காணப்பட்டது. எனவே மாலியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போது வயிற்றில் 6 குழந்தைகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் பிரசவம் சிக்கலாக இருக்கும் என்றும் டாக்டர்கள் தெரிவித்ததால் சிஸ்ஸே விமானம் மூலம் உள்ள மொராக்கோ நாட்டின் காசாப்ளங்கா நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதியன்று, அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு தான் ஹலிமாவின் வயிற்றில் 6 அல்ல, 9 சிசுக்கள் வளர்ந்து வருவது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, 2021ம் ஆண்டு மே 4ம் தேதி பிரசவத்திற்காக சிஸ்ஸே விமானம் மூலம் மொராக்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். காசாபிளாங்காவில் உள்ள ஐன் போர்ஜா மருத்துவமனையில் சிஸ்ஸேவிற்கு 5 பெண் மற்றும் 4 ஆண் குழந்தைகள் உட்பட 9 குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொரு குழந்தையும் 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடை வரை மட்டுமே இருந்தன. குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறந்த கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகமிருந்தது. எனவே, தாயும், சேயும் மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் குழந்தைகளின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உலகளவில் உயிரோடு ஒரே பிரசவத்தில் அதிகபட்சமான குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை.
இந்த குழந்தைகளுக்கு தினமும் 100 டயப்பர்கள் மற்றும் ஆறு லிட்டர் பால் தேவைப்படுகிறது. 9 குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதைக் கண்டு பெற்றோர் அஞ்சிய நடுங்கிய நிலையில் அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. குழந்தைகளின் பராமரிப்புக்கான செலவுகளை இப்போது வரையிலும் மாலி அரசாங்கம் தான் ஏற்றுக்கொண்டுள்ளது. பிரசவம் முதல் 18 மாத பராமரிப்பு வரை இந்திய மதிப்பில் ரூ.10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.