சென்னை, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயது ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் அடுத்த சென்னகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆர்த்தி எம்.காம் முதலாமாண்டு படித்து வந்தார். 3,500 பேருக்கு பிரியாணி விருந்து, 80 சவரன் நகை என இவர்களின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 22 நாட்கள் திருமண ஜோடிகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த 3-ம் தேதி சேலையூர் அருகே தான் படிக்கும் தனியார் கல்லூரிக்கு செல்வதாக கூறி ஆர்த்தி சென்றுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. வீட்டில் பார்த்த போது நகைகளும் காணாமல் போகவே, 80 சவரன் நகைகளுடன் மனைவியை காணவில்லை என போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காணாமல் போன புதுமணப்பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பு சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் என்பவருடன் பழக்கம் இருந்தது பெண் வீட்டார் மூலம் தெரிய வந்துள்ளது. ஆகாஷின் செல்போனில் தொடர்பு கொண்டபோது அந்த போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் இருவரும் ஒன்றாக சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.