Skip to content
Home » 7ம் தேதி அமைதிப்பேரணியில் அணி திரள்வோம்….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

7ம் தேதி அமைதிப்பேரணியில் அணி திரள்வோம்….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மறைந்த திமுக தலைவர்  கருணாநிதியின்  6ம் ஆண்டு நினைவு நாள் வரும் 7ம் தேதி  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்க  ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

என்றும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலாம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆறாவது நினைவு நாள், ஆகஸ்ட் 7-ம் நாள். ஆறாத வடுவாக நம் இதயத்தைக் கீறிக் கொண்டிருக்கிறது அவர் நம்மை விட்டுப் பிரிந்த அந்த வேதனை மிகுந்த நாள். இயற்கையின் விதி எந்த உயிரினத்தையும் புவி மீது நிரந்தரமாக விட்டுவைப்பதில்லை என்கிற உண்மையை உள்ளம் உணர்ந்திருந்தாலும், நம் உயிரினும் மேலான ஒப்பற்ற தலைவரை இழந்திட எப்படி சம்மதிக்கும் உடன்பிறப்புகளின் இதயம்?

ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பாதுகாவலராக, நவீனத் தமிழ்நாட்டைத் தட்டித் தட்டிச் செதுக்கிய சிற்பியாக, தமிழைத் திறம்படக் கையாண்ட படைப்பாளராக, செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த தமிழினப் போராளியாக, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு பொழுதையும் தமிழ் – தமிழர் – தமிழ்நாடு மேன்மைக்காக அர்ப்பணித்து அயராது உழைத்த ஓய்வறியாத சூரியனாம் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் இப்போதும் நம் இதயத் துடிப்பாக இருக்கிறார். ஒவ்வொரு செயலிலும் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறார். தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா வழியில் தொலைநோக்குப் பார்வையுடன் அவர் உருவாக்கிய திட்டங்களும், நிலைநிறுத்திய திராவிடக் கொள்கைகளும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்திய ஒன்றியம் முழுமைக்கும் வழிகாட்டும் மனிதநேயத் தத்துவமாகத் திகழ்கின்றன.

ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று புதுப்பிக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தின் வண்ணமிகு திறப்பு விழாவில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக உங்களில் ஒருவனான நான் பங்கேற்றேன். உங்களைப் போலவே நானும் அந்த மேம்பாலத்தைப் பயன்படுத்துகிற பயனாளிதான். அந்தப் பயன் நமக்கு கிடைக்கச் செய்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரன்றோ!

பொதுமக்களின் பேராதரவைப் பெற்றுள்ள கழக அரசுக்கு எதிராக அரசியல் எதிரிகள் திட்டமிட்டுப் பரப்ப முயற்சிக்கும் அவதூறுகள் ஈசல் பூச்சிகளைப் போல உடனடியாக உயிரிழந்து விடுகின்றன. உண்மையான அக்கறையுடன் நாம் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய இலட்சியப் பயணம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும். அதற்குப் பெரியார் – அண்ணா – கலைஞர் வளர்த்தெடுத்த திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கைகள் என்றென்றும் துணை நிற்கும். நம் நெஞ்சத்தில் நிறைந்து வாழும் உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது.

கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம். எதையும் தாங்கும் இதயம் கொண்ட தன் அண்ணன் அருகில் ஓய்வு கொள்ளும் ஓயாத உழைப்பாளியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் அமைதிப் பேரணி இது. தலைவரின் வரலாற்றையும் ஒரு நூற்றாண்டுகால தமிழ்நாட்டின் வரலாற்றையும் விளக்கும் வகையிலான அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்‘ எனும் அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்கள் அமைந்துள்ள இடத்தை இந்தக் குறுகிய காலத்திற்குள் தமிழ்நாட்டிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாகும். தங்கள் தலைமுறையை வாழவைத்த தலைவருக்குத் தமிழர்கள் செலுத்தும் நன்றிக் காணிக்கை இது.

நம் உயிர் நிகர்த் தலைவருக்கு நாமும் நம் நன்றிக் காணிக்கையைச் செலுத்துவோம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கழக அலுவலகங்களில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி நன்றியினைச் செலுத்துங்கள். கழக உடன்பிறப்புகள் அவரவர் வீடுகளில் தலைவர் கலைஞருக்கு நன்றியை செலுத்துங்கள். என்றென்றும் அவர் நம் உள்ளத்திற்குத் தரும் உத்வேகத்துடன் நம் லட்சியப் பயணத்தைத் தொடர்வோம். மக்கள் பணியாற்றித் தொடர் வெற்றிகளைக் குவிப்போம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!