திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வானதிரையான் பாளையம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த மரிய அலெக்ஸாண்டர்- சுடர்மணி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த மகள் பிபிக்ஷா (வயது 12), புதூர் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார் . இவர் நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் செல்ல, வானதிரையான் பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். விரகாலூர்- சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ் படிக்கட்டில் பிபிக்ஷா நின்றதாக கூறப்படுகிறது. வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியபோது, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார்.
அப்போது பஸ்சின் பின்புற சக்கரம் பிபிக்ஷாவின் இடுப்பில் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த பிபிக்ஷா, திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவுச் செய்து, அரசு பேருந்து ஓட்டுனர் தங்கதுரை (50), நடத்துனர் (35) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த பிபிக்ஷாவின் தாயார் சுடர்மணி கூறியபோது, “பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கவனக் குறைவால் தான் எனது மகள் உயிரிழந்திருக்கிறார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளின் உயிரிழப்புக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கண்ணீருடன் கூறினார்.