ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு கடந்த மாதம் 31ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 7ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 96 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 8ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் அமமுக வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 6 பேர் வேட்புமனுக்கள் வாபஸ் பெற்றனர். பிற்பகல் 3 மணியுடன் வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்தது.
அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 77 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர். முதலில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.