மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவைப் பருவத்துக்கு 38,441 ஹெக்டேர் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 95 சதவீத நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய 5 சதவீத பணிகள் இம்மாத இறுதியில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்பிக் நிறுவனத்தில் இருந்து குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டன.
யூரியா 250 மெட்ரிக் டன், டிஏபி 250 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 250 மெட்ரிக் டன் என மொத்தம் 750 மெட்ரிக் டன் உரங்கள் வந்தடைந்த நிலையில், அவற்றில் 350 மெட்ரிக் டன் உரம் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீதமிருந்த 400 மெட்ரிக் டன் உரங்கள் மயிலாடுதுறை மாவட்ட பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்பட்டது.
இதனை, 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட தனியார் உர விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். உரம் வரத்தினை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சேகர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.