தீபாவளி பண்டிகை கொண்டாடபொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை தரப்பில் வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல 10,975 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல 5,920 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 16,895 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் நேரடியாக டிக்கெட்டுகளை கோயம்பேடு மற்றும் தாம்பரம் சானடோரியத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 மையங்களிலும், ஆன்லைன் மூலமாக போக்குவரத்து துறையால் வெளியிடப்பட்டுள்ள www.tnstc.in இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தீபாவளி பண்டிகைக்கு அரசு பேருந்துகளில் சொந்த ஊர் செல்ல இதுவரை 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சொந்த ஊர் செல்ல, இன்று காலை வரை 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் முன்பதிவு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 75,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, இந்த ஆண்டு அரசு போக்குவரத்து பேருந்துகளில் 5.90 லட்சம் பேர் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.