திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் பலரும் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். “முயற்சி. முயற்சி.. முயற்சி… அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள், எம்.பி் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர். பின்னர் மரக்கன்றுகள் நட்டார்.
தலைவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு தொண்டர்களின் வாழ்த்துக்களைபெற்றார். பல்லாயிரகணக்கான தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் இதில் பங்கேற்று முதல்வருக்கு பொன்னாடை, புத்தங்கங்கள் பரிசாக வழங்கினர். அவை அறிவாலயத்தில் மலைபோல் தேங்கி உள்ளது. சில நிர்வாகிகள் முதல்வருக்கு வெள்ளி வீரவாள் பரிசாக வழங்கினர்.
இந்த நிலையில் ஒரு தொண்டர் ஸ்டாலினுக்கு ஒட்டகம் ஒன்றை பிறந்த நாள் பரிசாக வழங்கினார். அந்த ஒட்டகத்தின் மீது கருப்பு, சிவப்பு ஆடை போர்த்தப்ட்டு அழைத்து வரப்பட்டது. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க நீண்ட வரிசையில் தொண்டர்கள் காத்திருந்தனா். மாவட்ட கழகங்கள் சார்பில் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு மரக்கன்றுகள் மஞ்சள் பையில் வைத்து வழங்கப்பட்டது. இது தவிர அனைவருக்கும் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
முதல்வர் பிறந்தநாளையொட்டி முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் பலர் போன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியில்அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு: “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன். என கூறி உள்ளார்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்: “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமித்ஷாவிற்கு முதல்-அமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா என வடநாட்டு தலைவர்கள் , தமிழக தலைவர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவே முதல்வரை வாழ்த்தியது.
இதுபோல் அனைத்து கட்சி தலைவர்களும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கவர்னர்கள் ஆர்.என். ரவி, தமிழிசை சவுந்தர்ராஜன், டிவிஎஸ் அதிபர் வேணு ஸ்ரீனிவாசன் , மாநில திட்டக்குழு உறுப்பினரும், TATT நிறுவனத்தின் தலைவருமான மல்லிகா சீனிவாசன், காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, பாஜ தலைவர் அண்ணாமலை, கவிஞர் வைரமுத்து, நடிகர் நாசர், விசிக தலைவர் தொல். திருமாவளவன், நடிகர்கள் கமல், ரஜினி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் , சமக தலைவர் சரத்குமார் மற்றும் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், திரைத்துறையினர் என ஏராளமானோர் நேரிலும், போன்மூலமும் வாழ்த்து தெரிவித்தனர்.
மாலையில் சென்னையில் முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு அமைச்சர் துரை.முருகன் தலைமை தாங்குகிறார். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் என அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துகிறார்கள்.