திருச்சி, வயலூர் சாலை, உய்யக்கொண்டான்திருமலை, ஷண்முகா நகர் 3 ஆவது குறுக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செ. கந்தவேல் (50 மகன் அபிமன்யு. இவர் கடந்த 2022 ஆவது ஆண்டு மார்ச் 10ம் தேதி தனது இரவு, ஷண்முகா நகர் 5 ஆவது குறுக்குத்தெரு பகுதியில் டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த திருச்சி மாவட்டம், நாச்சிக்குறிச்சி, ஜெயம் நகரைச் சேர்ந்த பா. ஸ்ரீ ராம் (24) என்பவர், அபிமன்யுவை நிறுத்தி, ஒரு அழைப்பு பேசித்தருவதாக கூறி அவரது போனை கேட்டுள்ளார். அபிமன்யு செல்போனை கொடுத்துவிட்டு அங்கு காத்திருந்தார். செல்போனில் பேசிய பின்னர் அதை திருப்பித் தரவில்லை. இது குறித்து அபிமன்யு செல்போனை கேட்டபோது, அதை தரமறுத்து, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அபிமன்யு முகத்தில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்து நிலைகுலைந்த அபிமன்யு சத்தம்போட்டு அலறியதும் ஸ்ரீராம் தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து கந்தவேல் அளித்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ஸ்ரீராமை கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, ஸ்ரீராம்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார். மேலும் ரூ. 5000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஹைமந்த் ஆஜரானார்.