திருச்சி விமான நிலையம், பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (43) கார் டிரைவர், விமான நிலையம் காந்திநகரை சேர்ந்த பாஸ்கர் (35), அவரது தந்தை உபகாரன் (59) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு சரவணக்குமாரின் வீட்டுக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தினர். பெண் விவகாரத்தில் இந்த பயங்கரம் நடந்தது.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் தந்தையும், மகனும் அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயத்துடன் கிடந்த சரவணக்குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சரவணக்குமாரின் மகன் கர்ணன் விமானநிலைய போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி மீனா சந்திரா நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், பாஸ்கருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், உபகாரனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.6,500 அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.