தூத்துக்குடியில் காப்பர் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்த ஒரு பாய்லர் வெடித்த விபத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த பொறியாளர் விஜய் என்பவர் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து தொழிலாளர் நல துணைத்தலைமை ஆய்வாளர் சுந்தர ஆத்மன் காப்பர் ஆலையை ஆய்வு செய்து, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை எனக்கூறி அந்த ஆலையை மூட உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து ஆலை நிர்வாகம் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதன் பிறகு ஆலையை திறக்க வேண்டுமானால் சென்னையில் உள்ள தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர் இளங்கோவன் அந்த ஆலையை ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும். அதன் பிறகு தான் திறக்க முடியும்.
அதன் பேரில் ஆலை நிர்வாகம் சில பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டது. எனவே ஆலையை ஆய்வு செய்ய வரும்படி சென்னையில் உள்ள தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர் இளங்கோவனுக்கு கடிதம் எழுதியது. இந்த கடிதம் கிடைத்ததும், இளங்கோவன் சென்னையில் இருந்து தூத்துக்குடியில் உள்ள காப்பர் ஆலையின் பொதுமேலாளரை போனில் தொடர்பு கொண்டார்.
ஆலையை திறக்க சான்று அளிக்க வேண்டுமானால் தனக்கு ரூ.5 லட்சம் வேண்டும் என்று லஞ்சம் கேட்டார். ஆலை நிர்வாகமும் அதை ஒத்துக்கொண்டது. இந்த நிலையில் அதிகாரி இளங்கோவன் 2008 டிசம்பர் 12ம் தேதி நான் திருச்சிக்கு ஒரு வேலையாக வருகிறேன். அங்கு வந்து எனக்கு லஞ்ச பணத்தை கொடுத்து விடுங்கள் என பேசி முடித்தார்.
அதன் பேரில் ஆலை நிர்வாகி ஒருவர் ரூ.2 லட்சம் முன்பணத்துடன் திருச்சி வந்தார். அதிகாரி இளங்கோவனும், அவரது மனைவி டாக்டர் கனகமுத்துவும் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்கி இருந்தனர். இந்த ஓட்டலில், இந்த தளத்தில் , இந்த அறையில் இருக்கிறேன். இரவில் பணத்துடன் வாருங்கள் என போனில் மீண்டும் இளங்கோவன் நினைவூட்டினார்.
இந்த தகவல் அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அம்பிகாபதிக்கு ரகசியமாக கிடைத்தது. ஆனால் எந்த புகாரும் வரவில்லை. வழக்கமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறு சிறு அதிகாரிகளைத்தான் கைது செய்வார்கள் என்ற பேச்சு உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தொழிற்சாலை பாதுகாப்பின் உச்சபட்ச அதிகாரியான இளங்கோவனை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கே ஒரு மகுடம் சூட்டவேண்டும் என கருதிய டிஎஸ்பி அம்பிகாபதி, தனது குழுவினருக்கு திட்டத்தை விளக்கி அவர்களை தயார்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் அந்த ஓட்டலில் மாறுவேடத்தில் டிஎஸ்பி அம்பிகாபதி, இன்ஸ்பெக்டர்கள் சூரக்குமார், பிரசன்னவெங்கடேசன், பாண்டித்துரை மற்றும் போலீசார் கண்காணித்தனர். அப்போது ஒருவர் சூட்கேசுடன் வந்தார். அவர்தான் லஞ்சப்பணம் கொடுக்க போகிறார் என யூகித்துக்கொண்ட டிஎஸ்பி அம்பிகாபதி குழுவினர், அந்த நபர் எந்த தளத்திற்கு, எந்த அறைக்கு போகிறார் என கண்காணித்தனர்.
சரியாக இளங்கோவன் இருந்த அறைக்கு சென்று பணத்தை கொடுத்தார். அதை இளங்கோவன் வாங்கி தனது சூட்கேசுக்கு மாற்றினார். அப்போது அந்த அறைக்குள் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் இளங்கோவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அய்யோ, அம்மா என துள்ளிப்பார்த்தார், கெஞ்சிப்பார்த்தார், விடவில்லை.
விடிய விடிய விசாரணை நடத்தி உண்மையை வரவழைத்தனர். பின்னர் இளங்கோவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து இளங்கோவன் தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் 31.01.2009 அன்று பணி ஓய்வு பெற இருந்தார். ஆனால் அவர் இவ்வழக்கில் சிக்கியதால், தமிழ்நாடு அரசு இவரை பணி ஓய்வு பெற அனுமதிக்காமல், இவரை பணி இடை நீக்கத்திலேயே தொடர்ந்து வைத்திருந்தது.
இவ்வழக்கின் விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று (13.10.2023) சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.அதன் படி இளங்கோவன் கையூட்டு கேட்டது மற்றும் வாங்கியது ஆகிய இரு குற்றச்சாட்டுகளும் ஐயமற என்று நிரூபிக்கப் பட்டதாக தீர்மானித்து இளங்கோவனுக்கு முதல் குற்றத்திற்காக. ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும், இரண்டாவது குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் தனி நபர் எவரும் எழுத்துப் பூர்வமான புகார் எதுவும் கொடுத்திராத நிலையில், தொலை பேசி மூலம் ஒரு நபர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவுத் துணைக்கண்காணிப்பாளர் அம்பிகாபதி, நடவடிக்கையைத் தொடங்கி ஒரு துறையின் தலைவரை( தமிழ்நாடு தொழிற்சாலைகள் துறை)கையும் களவுமாகக் கைது செய்து அவரிடமிருந்து கையூட்டுப் பணத்தைக் கைப்பற்றி துணைக்கண்காணிப்பாளர் தானாகவே முன் வந்து முதல் தகவல் அறிக்கைத் தாக்கல் செய்து, மேல் நடவடிக்கை எடுக்கப் பட்டு இளங்கோவன் நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டுள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் விளைவாக பணி விதிகளின் படி தமிழ்நாடு அரசு இளங்கோவனை நிரந்தர பணி நீக்கம் (டிஸ்மிஸ்)செய்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
“தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர்” என்ற பதவியின் பெயரை ” இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்” என்று தமிழ்நாடு அரசு இப்போது பெயர் மாற்றம் செய்துள்ளது.