தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திராணி (50). நேற்று முன்தினம் இரவு வீட்டில் இந்திராணி தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியை பிரித்துக் கொண்டு 3 மர்ம நபர்கள் பன்னீர்செல்வம் வீட்டுக்குள் புகுந்தனர். திடுக்கிட்டு எழுந்த இந்திராணி மற்றும் அவரது மகள்கள் அச்சத்தில் அலறியுள்ளனர். தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டிய அந்த மர்ம நபர்கள் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறியுள்ளனர். பின்னர் கத்தி முனையில் இந்திராணி, சுஷ்மிதா, ஸ்ருதி ஆகியோர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயின்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து இந்திராணி தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி நகை பறித்து சென்ற சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
