Skip to content
Home » விடுமுறை கொண்டாட்டம்……சென்னையில் இருந்து 7லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

விடுமுறை கொண்டாட்டம்……சென்னையில் இருந்து 7லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தமிழகத்தின்  அனைத்து மாவட்ட மக்களும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தங்கி தொழில் செய்கிறார்கள். மற்றும் கல்வி கற்று வருகிறார்கள். இவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில், இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, நாளை விஜயதசமி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என பண்டிகையுடன் தொடர் விடுமுறையும் வருவதால் ஏராளமானோர் சொந்த ஊர் சென்றனர்.

கடந்த 9-ம் தேதி முதலே பலரும் சொந்த ஊருக்கு பயணிக்கத் தொடங்கினர். அவர்களது வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், அனைத்து பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்தவுடன் மக்கள் முண்டியடித்துக் கொண்டு, இடம்பிடித்தனர். இதையடுத்து, பயணிகளின் வருகைக்குஏற்ப பேருந்துகள் அடுத்தடுத்து இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கூட்டத்தை போலீஸார் ஒழுங்குபடுத்தினர்.

பேருந்து நிலையத்துக்கு செல்வதற்காக மாநகர பேருந்துகள், பறக்கும் ரயில், மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் ஏராளமானோர் பயணித்தனர். இதனால், மாநகர பேருந்து, ரயில் நிலையங்களிலும் கடும் கூட்டம் காணப்பட்டது. இதற்கேற்ப மாநகர பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. பலர் தங்களது சொந்த வாகனங்களிலும் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மக்கள் சிரமமின்றி பயணிக்கும் விதமாக போதிய பேருந்துகள் இயக்க போக்குவரத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயாராக உள்ளோம். இதேபோல, வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்ப வசதியாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஞாயிற்றுக்கிழமை பயணிக்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்’’ என்றனர்.

கடந்த 2 நாட்களாகவே பலரும்வெளியூர் புறப்பட்டு சென்ற நிலையில், நேற்று அதிக அளவிலான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாதபொது பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

வழக்கமான ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்களுக்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி, தாம்பரத்தில் இருந்து கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. தசரா பண்டிகை காரணமாக, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்து, ஆம்னி பேருந்து, ரயில்கள், சொந்த வாகனங்கள் என சென்னையில் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக பயணம் மேற்கொண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!