கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், மாவேலிக்கரையை அடுத்த புன்ன மூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ் (38) இவரது மனைவி வித்யா. இத்தம்பதியினரின் ஒரே மகள் நட்சத்திரா (6) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மகேஷ் 3 ஆண்டுகளுக்கு முன் மனைவி வித்யா தற்கொலை செய்து கொண்டதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பினார். இதனிடையே 2 வருடங்களுக்கு முன் தந்தை ரெயிலில் அடிபட்டு இறந்த நிலையில், தாய் சுனந்தா (62) மற்றும் மகள் நட்சத்ராவுடன் மகேஷ் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் சுனந்தா பக்கத்து வீட்டில் வசித்து வந்த மகள் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில், மகள் நடத்திராவை மகேஷ் கோடாரியால் வெட்டியதாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சுனந்தாவையும் மகேஷ் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனிடையே படுகாயம் அடைந்த நட்சத்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகேஷின் தாயார் மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ிசை பெற்று வருகிறார்.
மனைவி 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மறு திருமணம் செய்ய மகேஷ் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மகேசுக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததால், பலரும் மகேசுக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை. இதனால் மகளை மகேஷ் கொன்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மாவேலிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மகேஷை சிறையில் அடைத்தனர். மகேஷ் கடந்த 4 ஆண்டுகளாக போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டுக்காரரான கே.வி. அருண் தனது பேஸ்புகில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
“ஸ்ரீமகேஷ் எனது பக்கத்து வீட்டுக்காரர், உள்ளூரைச் சேர்ந்தவர், பல வருடங்களாகத் எனக்கு தெரிந்த குடும்பம், செல்வம், படிப்பு, செல்வாக்கு உள்ள குடும்பம். ஆனால் இந்த இளைஞனின் போதைப் பழக்கம் நான்கு வருடங்களில் அந்தக் குடும்பத்தை அழித்துவிட்டது. மகேஷ் நேற்று 6 வயது சிறுமியும், சொந்த மகளுமான நட்சத்திராவை கோடாரியால் வெட்டி கொலை செய்து உள்ளான் .இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவரது தொல்லை தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சில வருடங்களுக்கு முன் அவரது அப்பா ரெயிலில் அடிபட்டு இறந்து போனார்.அப்போது விபத்து மரணம் என்று சொன்னாலும் இப்போது அதுவும் தற்கொலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன். “நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தையுடன் வெட்டப்பட்ட மகேசின் தாயை பார்த்தேன். அவர்களின் தற்போதைய உடல் நிலையை பார்த்து மனம் உடைந்து போனேன். ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். முன்பு போல் இல்லை. போதை மருந்துகள் எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கின்றன,
அது பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி. நிலையான.. அவர்கள் எங்கு செல்கிறார்கள், யார் நல்லவர்கள் என்பதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பெற்றோரிடம் எதையும் சொல்லக்கூடிய சூழ்நிலையை வீட்டில் உணர்வுபூர்வமாக உருவாக்க வேண்டும். மேலும், குழந்தைகளை விளையாட்டு, நடனம், உடற்கட்டமைப்பு, பறவை வளர்ப்பு அல்லது குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு அரசியல்-மத-சமூக அமைப்பிலாவது ஈடுபடுத்துவதற்கான சூழ்நிலையை நாம் உணர்வுபூர்வமாக தயார் செய்ய வேண்டும். சமூக சூழல் மிகவும் மோசமாக இருப்பதால், எந்த வீட்டிலும் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் நடக்கும். போதைப்பொருள் விற்பனை என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு வணிகம் அல்ல, அது சர்வதேச இலக்குகளைக் கொண்டுள்ளது.எதிரி முட்டாள் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும் என கூறி உள்ளார்.