Skip to content
Home » நாளை 6ம் கட்ட வாக்குப்பதிவு…..டில்லி, கொல்கத்தாவில் நிலவரம் என்ன?

நாளை 6ம் கட்ட வாக்குப்பதிவு…..டில்லி, கொல்கத்தாவில் நிலவரம் என்ன?

18 வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. 6ம் கட்டத் தேர்தல் நாளை நடக்கிறது.  இதில் 8 மாநிலங்களில் 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. 889 வேட்பாளர்கள் இங்கு களத்தில் உள்ளனர். 6ம் கட்டத்தை பொறுத்த வரையில்,  பாஜக கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் டில்லியும் முக்கியமானவை. பாஜக வகுக்கும் வியூகங்களுக்குப் பதிலடி கொடுப்பதிலும், புதிய சவால்களை ஏற்படுத்துவதிலும் அம்மாநிலங்களின் முதல்வர்களான மம்தா பானர்ஜியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் அதிரடி காட்டிவருகின்றனர். இவர்களது வியூகங்கள் முன்  பாஜக திணறிக்கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஆனால், ஏராளமான பாஜகவினர் (திரிணமூல் காங்கிரஸிலிருந்து சென்றவர்கள்) மீண்டும் ‘தீதி கழக’த்துக்குத் திரும்பிவிட்டனர். மம்தா அரசு மீதான ஊழல் புகார்கள், வன்முறைச் சம்பவங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை வைத்து, இந்த முறையும் கணிசமான இடங்களை வெல்ல வியூகம் வகுத்த பாஜகவுக்கு, சந்தேஷ்காளியைச் சேர்ந்த பெண்கள் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜஹான் உள்ளிட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் ஆயுதமானது.

சந்தேஷ்காளியில் மத அடிப்படையில் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்த நிலையில், மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரியின் தூண்டுதலின் பேரிலேயே அந்தப் பெண்கள் பொய்ப் புகார் அளித்ததாகக் காணொளி ஆதாரத்துடன் திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்தது. ஆனால், அந்தக் காணொளி திரிக்கப்பட்டது என்று கூறும் பாஜகவினர், அந்தக் காணொளியால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று வாதிடுகின்றனர்.

இதற்கிடையே, ஆளுநர் சி.வி.அனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகை முன்னாள் பெண் பணியாளர் முன்வைத்த பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு பாஜகவை அதிரவைத்தது. தன் மீதான புகாரை ஆளுநர் மறுத்தாலும் தங்களிடம் காணொளி ஆதாரம் இருப்பதாக வாதிடுகிறது திரிணமூல் காங்கிரஸ். முன்னாள் நீதிபதியும் பாஜக வேட்பாளருமான அபிஜீத் கங்கூலி மம்தா குறித்துத் தரம் தாழ்ந்த வகையில் பேசிய பேச்சும் திரிணமூல் காங்கிரஸுக்குப் புதிய ஆயுதமாகியிருக்கிறது.

வெகுண்டெழுந்த பிரதீப்தானந்தா, மம்தா மன்னிப்புக் கேட்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பிஇருக்கிறார். இதைக் கையில் எடுத்த பாஜக, மம்தா இந்துக்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. உடனே, “நான் இந்துவா முஸ்லிமா என்றெல்லாம் பாஜக சான்றிதழ் தர வேண்டாம். நானே ஒரு இந்து பிராமணப் பெண்தான்” என்று மம்தா பதிலடி கொடுத்தார்.

முஸ்லிம்களின் ஆதரவு முன்பைவிடவும் திரிணமூல் காங்கிரஸுக்குக் கணிசமாக அதிகரித்திருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி விவகாரங்களில் முஸ்லிம்களுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்திருக்கும் மம்தா, “உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை எல்லாம் இருக்கிறதுதானே? அப்படியென்றால், நீங்கள் இந்தியக் குடிமக்கள்தான்” என்று துணிச்சலாகப் பேசிவருகிறார். பாஜகவுக்கு அதுவே அரசியல் ஆயுதமாகவும் ஆகிவிடுகிறது.

 டில்லியில், 2014, 2019 என இரண்டு தேர்தல்களிலும்  மொத்தம் உள்ள ஏழு இடங்களையும் கைப்பற்றிய பாஜகவுக்கு இந்த முறை ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி கடும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோரின் வரிசையில் முதல்வர் அர்விந்த்கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டது ஆம் ஆத்மி கட்சியை வீறுகொண்டு எழச் செய்தது.

50 நாள்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறையின் பகீரத முயற்சிகளைத் தாண்டி உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியது, இந்தத் தேர்தலின் முக்கியமான திருப்புமுனை. வெளியே வந்த வேகத்தில், பாஜகவுக்கு வாக்களித்தால் மோடி அல்ல, அமித் ஷாதான் பிரதமராவார் எனக் கூறி பாஜகவுக்கே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் கெஜ்ரிவால். சிறைக்குச் சென்றாலும் முதல்வர் பதவி பறிபோய்விடாமல் பார்த்துக்கொண்ட கெஜ்ரிவால், ‘அனுமன் ஆசி’யுடன் சிறை மீண்டதாகச் சொல்லி, பாஜகவின் இந்துத்துவ அஸ்திரங்களுக்கும் ஒருவகையில் பதிலடி கொடுக்கிறார்.

இலவசப் பேருந்து, தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மகளிரிடம் நற்பெயரை வாங்கிவிட்டதாக நம்பும் ஆம் ஆத்மி, பல்வேறு வாக்குறுதிகளின் மூலம் பெண் வாக்காளர்களைக் கவரும் முனைப்பில் இருக்கிறது. இந்தச் சூழலில், ஸ்வாதி மாலிவால் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை பாஜக ஆயுதமாக்குவதில் வியப்பில்லை.

ஆனால், முன் அனுமதி வாங்காமல் அங்கு காலை 8 மணிக்கு மாலிவால் சென்றது பாஜகவின் சதித்திட்டம் என்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர். சீக் ஃபார் ஜஸ்டிஸ் விவகாரத்தில் என்ஐஏ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா, மாலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் மெளனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியதை வைத்து, இது நிச்சயம் பாஜகவின் சதிதான் என்று அக்கட்சியினர் அடித்துச் சொல்கிறார்கள்.

கூடவே, மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தபோது பாஜக அமைதி காத்தது ஏன் என்றும், அந்தப் போராட்டத்தில் இதே ஸ்வாதி மாலிவால் காவல் துறையினரால் தாக்கப்பட்டபோது ஏன் அதைக் கண்டிக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்புகிறது.

ராகுல் – கெஜ்ரிவாலுக்குப் பாகிஸ்தான் ஆதரவு இருப்பதாகவும்  பாஜக விமர்சிக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி, இண்டியா கூட்டணி குறைந்தபட்சம் 300 இடங்களில் வெல்லும் எனப் பேசுகிறார் கெஜ்ரிவால். இதுவரையிலான ஐந்து கட்டத் தேர்தலில், தங்களுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக இரு தரப்பும் பேசிவருகின்றன. நாளைக்கு ஆறாம் கட்ட வாக்குப்பதிவு. அதன் பிறகு  ஜூன் 1ல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு. அதைத்தொடர்ந்து ஜூன் 4ல்  தெரிந்து விடும் யாருடைய ஆட்சி என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!