தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழ்நாட்டில் இதற்காக
68,321 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 44,800 மையங்களில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 950 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் 39 எம்.பிக்களை தேர்வு செய்ய நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட், விவிபேட், வாக்காளர் பட்டியல்,டம்மி பேலட் ஷீட்,வாக்குப் பதிவுக்கான தடுப்பு அட்டைகள்,ஸ்டாம்ப் பேட்,தீப்பெட்டி,தேர்வு எழுதும் அட்டை,‘உள்ளே, வெளியே, போலிங் அதிகாரிகள், ஆண், பெண்’ எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட அட்டைகள், பிளேடு, கயிறு,பசை,நூல்,சீல் வைக்க தேவையான பொருள்கள், பென்சில்,இரும்பு ஸ்கேல்,கார்பன் பேப்பர்,கிளிப்,ரப்பர்கள்,கவர்,பேக்கிங் செய்ய தேவையான பொருட்கள் என, 64 வகை பொருள்கள் பெட்டி மற்றும் பைகளில் அனுப்பும் பணி இன்று காலை தொடங்கியது. திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இருந்தும் பூத்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி நடந்தது. முன்னதாக பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் காலை 10 மணிக்கு பொருட்கள் மற்றும் அதனை ஏற்றிச்செல்லும் முதல் வாகனம் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து நல்ல நேரம் பார்த்து வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பொருட்கள் இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட பூத்களுக்கு சென்றடைந்து விடும்.
நாளை காலை 5.30 மணிக்கு ஒவ்வொரு பூத்திலும் மாதிரி வாக்குப்பதிவு, ஏஜெண்ட்கள் முன்னிலையில் நடைபெறும். அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இடைவிடாமல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு பூத்களும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் ட்ரோன் காமிரா மூலம் கண்காணிக்ககவும் ஏற்பாடு நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.