Skip to content
Home » 63 வயதில் மருத்துவம் படிக்கும் காரைக்கால் அம்மையார்

63 வயதில் மருத்துவம் படிக்கும் காரைக்கால் அம்மையார்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற திரைப்படத்தில், தந்தையின் கனவை நினைவாக்க வயது முதிர்ந்த கமல்ஹாசன் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பார். அது  கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும்,  நிறுவாழ்க்கையிலும் அதுபோல நடக்கத்தான் செய்கிறது. 63 வயது மூதாட்டி  ஒருவர் காரைக்காலில் எம்.பி.பி.எஸ். படித்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.  50 வயதானாலே பலர் ஓய்வெடுக்கும் இந்த காலத்தில், மக்களுக்கு சேவை செய்வதற்காக 63 வயதான சுஜாதா ஜடா, என்ற பெண், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கும் செயல் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. இந்த ருசிகரம் குறித்த விபரம் வருமாறு:-

மத்திய பிரதேச மாநிலம் அம்லா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யாதவ் (66), இவர் பிரபல தொழிலதிபர். இவரது மனைவி சுஜாதா ஜடா (63).இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர், மத்திய பிரதேசத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில், ராணுவத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்று, பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் சுஜாதா ஜடா ஓய்வு பெற்றார். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் சுஜாதா ஜடா, ஓய்வு காலத்தை மக்களுக்கு சேவை செய்வதற்காக முடிவெடுத்தார். அதுவும் தள்ளாத வயதில் டாக்ராக முடிவெடுத்தார். தொடர்ந்து, சுஜாதா ஜடா கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இதனை அடுத்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள விநாயகா மிஷின் மருத்துவக்கல்லூரியில் சுஜாதா ஜடாவிற்கு இடம் கிடைத்தது. தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியாக சுஜாதா ஜடா கல்லூரியில் நுழைந்தார். வகுப்பறைக்கு சென்ற சுஜாதா ஜடாவை, கல்லூரி மாணவர்கள் புதிய பேராசிரியை என கைத்தட்டி வரவேற்றனர். ஆனால், சுஜாதா ஜடாவோ தனது இயல்பான புன்னகையில், நானும் உங்களைபோல் ஒரு மாணவிதான் என்றதும் முதலில் மாணவர்கள் நம்ப மறுத்தனர்.

பெற்றோர் வயதில் மாணவி பின்னர், மாணவிக்கான அடையாள அட்டையை அவர் காட்டியதும், சக மாணவர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். பெற்றோர் வயதில் ஒரு மாணவியா? என ஆச்சரியமாக இருந்தாலும், போகபோக சக மாணவியை போல், அனைவரும் அவருடன் பழகி வருகின்றனர். இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுஜாதா ஜடாவுக்கு வகுப்பு எடுக்கும் மருத்துவ பேராசிரியருக்கு வயது 48. தனது படிப்பு குறித்து சுஜாதா ஜடா கூறுகையில்,”ராணுவத்தில் பணியாற்றினாலும், வங்கியில் பணியாற்றினாலும் எனது கவனம் மக்கள் சேவையில் தான் குறியாக இருக்கும். தற்போது எனக்கு வயது 63 என்றாலும் அதை நான் எப்போதும் உணர்ந்தது இல்லை. என் நோக்கமெல்லாம், மருத்துவமனையே இல்லாத எனது கிராமத்தில், சிறு மருத்துவமனை அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். அதற்காகதான் முறைப்படி டாக்டருக்கு படித்து சேவை செய்ய உள்ளேன்” என்றார். சுஜாதா ஜடாவின்  மருத்துவ படிப்பு பெற்றி பெற வாழ்த்துக்கள்  தெரிவிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *