திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 24). ரவுடி பட்டியலில் இருக்கும் இவர், கத்தியை காட்டி மிரட்டி, திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த இளஞ்செழியனிடம் செல்போன், பாலக்கரை மணிவேலிடம் இருசக்கர வாகனம், கீழ சிந்தாமணி சுதர்சனிடம் ரூ. 9800 பணம் ஆகியவற்றை பறித்து சென்று உள்ளார். 3 பேரும் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை, பொன்மலை போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல ரவுடி பட்டியலில் உள்ள ஏர்போர்ட் அண்ணாநகரை சேர்ந்த சிவா என்கிற சிவநேசன்(28) என்பவர், அதே பகுதியில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். இது குறித்து நவீன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஏர்போர்ட் போலீசார் சிவநேசனை கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
மேலும் உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் கத்தி முனையில் குடிக்க பணம் கேட்டு மிரட்டிய கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி அய்யப்பன் என்கிற அரவிந்த்(29) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதே போல மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்த ரவுடி விஜய் என்கிற பாண்ட விஜய்(24) என்பவர் சஞ்சீவி நகர் செந்தில்மணியிடம் கத்தி முனையில் குடிக்க பணம் கேட்டு மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விஜய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் தென்னூர் ஆழ்வார்தோப்பு கேஸ் குடவுன் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட ரவுடி மாலிக் பாட்சா(26) என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில், இருசக்கர வாகனம், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில அடைத்தனர்.
இச்சம்பவம் ரவுடிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.