கோவை வாளையாறு சோதனைச் சாவடி அருகே உரிய அனுமதியின்றி கேரளாவிற்கு ஜல்லிக்கற்கள் கடத்திய 6 லாரிகளை கனிமவளத்துறை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்திலிருந்து வாளையார் வழியாக உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் புகார் தெரிவித்து வந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியிரிடம் புகார் மனுக்களை வழங்கி வந்தனர். இதனால் கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு உரிய அனுமதியின்றியும், அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிகவள லாரி ஓட்டுநர்கள், உரிமையாளர்களை பிடித்து வழக்கு பதிவு செய்வதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனிமவளத்துறை உதவி புவியியலாளர் அஸ்வினி தலைமையிலான தனிப்படை அதிகாரிகள்
வாளையார் சோதனை சாவடியில் புதன்கிழமை திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த சில லாரிகள், கனிகவளத்துறை அதிகாரிகள் நிற்பதை பார்த்ததும் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். பிறகு அங்கிருந்து அதிகாரிகள் லாரியை சோதனையிட்டபோது உரிய அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் கேரளாவிற்கு எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதே போல் அங்கு உரிய அனுமதியின்றி ஜல்லிக்கற்களை எடுத்து வந்த ஆறு லாரிகளை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து பிடிபட்ட 6 லாரிகளும் கே ஜி சாவடி காவல் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது. மேலும் உதவி புவியியலாளர் அஸ்வினி அளித்த புகார் அடிப்படையில் லாரிகளின் உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.