Skip to content

தஞ்சை வாலிபர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு… பரபரப்பு… செம டிவிஸ்ட்…

  • by Authour

எல்லாம் மாயை… மாயை… என்பது போல் இரவில் ஒற்றை மெசேஜ் அனுப்பி வாலிபரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது தனியார் வங்கி. அதுவும் ரூ.756 கோடின்னா பார்த்துக்கோங்க. இரவு முழுவதும் கோடீஸ்வரராக மகிழ்ச்சியில் இருந்த அந்த வாலிபருக்கு வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட ஏறவில்லை என்பதுதான் செம ட்விஸ்ட்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (29). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவருக்கு தனியார் வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு உள்ளது. அவர் வைத்துள்ள வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் வாயிலாக நண்பர் ஒருவருக்கு ரூ.1,000த்தை கணேசன் அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த ஆயிரம் ரூபாய் அவரது நண்பருக்கு செல்லவில்லை. அதனால் அந்த பணம் கணேசனுக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளது. இதை தொடர்ந்து வந்த மெசேஜ் தான் கணேசனை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. ஆமாங்க… வங்கியிலிருந்து வந்த மெசேஜில் கணேசனில் கணக்கில் இருப்பு தொகையாக ரூ. 756 கோடி இருப்பதாக காட்ட… தலைச்சுற்றி விட்டது அந்த வாலிபருக்கு. என்னது… என் கணக்கில் ரூ.756 கோடியா என்று

கணேசனுக்கு ஆச்சரியம் ஒரு பக்கம்… பயம் மறுபக்கம். இருந்தாலும் இரவு முழுவதும் கோடீஸ்வரராக இருந்துள்ளார். இதுக்கு அப்புறம்தாங்க இருக்கு செம ட்விஸ்ட். வந்தது வெறும் மெசேஜ்தான். வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட கூடுதலாக ஏறவில்லை. இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வாலிபர் கணேசனிடம் தொடர்பு கொண்டு தகவல் கேட்ட போது அவர் கூறியதாவது: நான் தஞ்சாவூர் புது பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கோட்டக் மஹேந்திரா தனியார் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். என்னுடைய கணக்கில் சுமார் ரூ.15,000 வைத்திருந்தேன். நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு எனது நண்பருக்கு அவசர தேவைக்காக கேட்டதால் ரூ.1000 அனுப்பினேன். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் பணம் அனுப்பியது பெயில்டு என மெசேஜ் வந்தது. தொடர்ந்து சில நிமிடங்களில் நான் அனுப்பிய பணம் மீண்டும் என்னுடைய வங்கி கணக்கில் கிரெடிட் ஆகிவிட்டது. அதுக்கு அப்புறம் வந்த மெசேஜ் தான் எனக்கு பெரும் ஷாக் ஆக இருந்தது. அந்த மெசேஜில் என்னுடைய வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பதாக இருந்தது. நள்ளிரவு என்பதால் காலையில் இதுபற்றி விசாரிப்போம் என்று உறங்கிவிட்டேன்.

விடிந்ததும் மற்றொரு வங்கியில் வேலை செய்யும் எனது நண்பரை சந்தித்து எனக்கு வந்த மெசேஜை காட்டினேன். அதை பார்த்துவிட்டு செக் செய்த அவர் உனது அக்கவுண்டில் பணம் இருப்பதாகத்தான் மெசேஜ் வந்துள்ளது. சம்மந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடம் தகவல் சொல் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து காலை பத்து மணியளவில் தஞ்சையில் உள்ள கோட்டக் மஹேந்திரா வங்கிக்கு சென்று மெசேஜை காண்பித்து விபரம் கேட்டேன்.

அதை பார்த்த ஊழியர்கள் நீங்கள் போங்கள் என்னவென்று விசாரித்து விட்டு உங்களுக்கு போன் செய்கிறோம் என என்னை திருப்பி அனுப்பி விட்டனர். வங்கி கணக்கில் எனது சேமிப்பு தொகை மட்டுமே இருந்தது. ரூ.756 கோடி வரவாகவில்லை என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த டிரைவர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு அதில் இருந்து அவர் ரூ.25 ஆயிரம் பணம் எடுத்ததும், பின்னர் மீதித் தொகையை வங்கி தரப்பு திருப்பி டிரான்ஸ்பர் செய்து கொண்ட சம்பவமும் நடந்தது. அதை தொடர்ந்து தற்போது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு உள்ளதாக வந்த மெசேஜ் செம பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடிவேலு ஒரு படத்தில் கிணற்றை காணும் என்று அலப்பறை செய்வார் அல்லவா. அதுபோல நேற்று இரவு வந்துச்சுங்க… இன்னைக்கு காலையில இல்லைங்க என்பதுபோல் உள்ளது இந்த சம்பவம். இதுகுறித்து கோட்டக் மகேந்திரா வங்கியை தொடர்பு கொண்டபோது இதுகுறித்து மும்பையிலிருந்துதான் தகவல் வரவேண்டும் என்று தெரிவித்தனர். எது எப்படியோ இரவு முழுவதும் அந்த வாலிபரை கோடீஸ்வரராக (மெசேஜில் மட்டும்) ஆகிவிட்டது தனியார் வங்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *