பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. இந்த விழா பகல்பத்து, ராப்பத்து என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். பகல்பத்து உற்சவத்தின்போது நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுடன் எழுந்தருள்வார். வரும் 22ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இன்று – மாந்துளிர் நிற பட்டு அணிந்து சௌரிக் கொண்டை அணிந்து: அதில் கலிங்கத்துராய்; நெற்றி சரம், சூர்ய- சூர்ய வில்லை சாற்றி, மகர கர்ண பத்திரம்; ரத்தின அபய ஹஸ்தம்- தொங்கல் பதக்கம்; ரத்தின கடி அஸ்தம் (இடது திருக்கை), திரு மார்பில் ஆபரணங்களுகே ஏற்றம்
தரும் -ஸ்ரீ ரங்க விமான பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 18 பிடி (6 வட) முத்து சரம் , காசு மாலை; அரைச் சலங்கை; பின்புறம் – புஜ கீர்த்தி ; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; காசு மாலையும் தழைந்து வரும் படி சாற்றி ; கையில் தாயத்து சரங்கள்; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து அணிந்து புறப்பாடு கண்டுருளினார்.
23ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. 23ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 29ம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவை, 30ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி, ஜன.1ம் ேததி தீர்த்தவாரி நடக்கிறது. 2ம் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவடைகிறது.